இணையத்தில் வெளியான கபாலி படம்?

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள கபாலி படத்தின் அரை மணி நேர காட்சிகள் இணையத்தில் வெளியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், கலையரசன், தினேஷ், தன்ஷிகா, ராதிகா ஆப்தே, ரித்விகா, கிஷோர் மற்றும் பலரின் நடிப்பில் உருவான படம் கபாலி. இந்த படம் வருகிற 22ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலாய், சீனம் என பல மொழிகளில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இணையதளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், திரைப்படங்களை வெளியிடும் 200க்கும் மேற்பட்ட இணையதளங்களை முடக்க வேண்டும் என்று கபாலி பட தயாரிப்பாளர் தாணு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றமும், அந்த இணையதளங்களை முடக்க சொல்லி உத்தரவிட்டது. இந்நிலையில், கபாலி படத்தின் 30 நிமிட காட்சிகள் கொண்ட ஒரு வீடியோவை, ஒரு இணையதளம் நேற்று வெளியிட்டதாக தகவல் வெளியானது. உடனே அந்த இணையதளமும் முடக்கப்பட்டது. அதன்பின் அந்த இணையதளம் வேறொரு பெயரில் இயங்கியது. படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பே இணையத்தில் வெளியான சம்பவம், கபாலி தயாரிப்பு தரப்பை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment