ஹவுஸ் இன்செக்ட்ஸ் என்று சொல்லப்படும் பூச்சிகள் வீடுகளின் எல்லா இடங்களிலும் உள்ளன. அவற்றை விரட்டியடிக்க சுலபமானதாக இருக்கும் வழிகளை இங்கே காணலாம்.
மன மகிழ்ச்சிக்காக வீடுகளில் ‘பெட் அனிமல்ஸ்’ எனப்படும் வளர்ப்பு பிராணிகளை வளர்த்து வருவது பல வீடுகளில் வழக்கத்தில் இருந்து வருகிறது. சிறிய வகை பிராணிகளிலிருந்து பெரிய அளவிலான பிராணிகள் வரை பலவகையாக அவை இருக்கின்றன.
வீடுகளில் வளர்க்கப்படும் பிராணிகள் தவிரவும் சிறிய அளவிலான பூச்சிகளும் நம்மையறியாமல் நம்மோடு வலம் வருகின்றன. சிறியதாக இருக்கும் அந்த பூச்சிகளால் நமக்கு பலவித தொல்லைகள் உண்டாவதோடு ஆரோக்கிய குறைவான சூழ்நிலையும் வீடுகளில் ஏற்பட்டு விடுகிறது.
‘ஹவுஸ் இன்செக்ட்ஸ்’ என்று சொல்லப்படும் பூச்சிகள் வீடுகளின் எல்லா இடங்களிலும் உள்ளன. அவற்றை விரட்டியடிப்பதில் பல்வேறு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் எளிமையாகவும் வீடுகளில் பயன்படுத்த சுலபமானதாகவும் இருக்கும் வழிகளை இங்கே காணலாம்.
1. கொசுக்கள்: மருத்துவ குணமுள்ள பூண்டு கொசுக்களை விரட்டுவதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. சமையல் அறையில் மருந்தாக பயன்படும் பூண்டுக்கு கொசுக்களை விரட்டும் குணம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
நான்கு அல்லது ஐந்து எண்ணிக்கையில் பூண்டு விழுதை எடுத்து நசுக்கி, சுடுநீரில் போட்ட பின்பு அந்த நீரை வீடு முழுக்க தெளித்தால் கொசு தொல்லை வீட்டிலிருந்து விலகி விடும். பூண்டின் வாசம் பரவலாக இருப்பது அவசியமானதாகும்.
2. எறும்புகள்: வெள்ளை வினிகர் எறும்புகளை விரட்டும் தன்மை கொண்டது. வெயில் காலமாக இருந்தாலும் மழை காலமாக இருந்தாலும் எறும்புகள் வீட்டை சுற்றிவருவதில் தவறுவதில்லை.
எல்லா காலங்களிலும் வீட்டை சுற்றி வந்துகொண்டிருக்கும் எறும்புகளை விரட்ட எளிய வழி வெள்ளை வினிகரை தெளித்து விட வேண்டும். வீட்டில் எறும்பு தொல்லைகள் இருக்கும் இடத்தில் வெள்ளை வினிகரை ‘ஸ்பிரேயர்’ மூலமாகவும் தெளித்து விடலாம். எறும்புகளை வரவிடாமல் செய்ய இம்முறையானது பாதுகாப்பானதாகவும் இயற்கையானதாகவும் இருக்கிறது.
3. கரப்பான்பூச்சி: போரிக் பவுடர் கரப்பான் பூச்சியின் தொல்லையை விலக்கக்கூடியது. கழிவறை, சமையலறை, பூஜையறை உள்ளிட்ட எல்லா இடங்களிலும் கரப்பான் பூச்சிகள் தொல்லை கொடுக்கின்றன.
அவற்றை விரட்ட கோதுமை மாவுடன், கொஞ்சம் போரிக் பவுடரும், சிறிதளவு நீரும் சேர்த்து கலந்து உருண்டை பிடித்து கரப்பான்பூச்சி இருக்கும் இடத்தில் வைத்துவிட்டால், கரப்பான் பூச்சி தொல்லை முற்றிலும் விலகி விடும்.
4. சிலந்திகள்: சிலந்திகளை விரட்ட எலுமிச்சம்பழ தோல் சிறப்பான பொருளாக இருக்கிறது. மழை காலங்களில் சிலந்தியின் தொல்லை பல இடங்களில் பரவலாக இருந்துவரும்.
எலுமிச்சம்பழத்தின் தோலை சிலந்திகள் இருக்கும் இடத்தில் அல்லது அதற்கு அருகில் இருப்பதுபோல போட்டு வைத்து விடலாம். மேலும் சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றின் தோல்களையும் சிலந்திகள் இருக்கும் இடத்தில் போட்டு வைத்து விட்டாலும் சிலந்திகள் விரைவாக அந்த இடத்தை விட்டு சென்றுவிடும்.
5. ஈக்கள்: கற்பூரம் இறை வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல் ஈக்களை விரட்டுவதற்கும் பயன்படுகிறது. கற்பூரத்தில் இருக்கும் ‘டர்பெண்டைன்’ வாசனையானது ஈக்களை அருகில் வரவிடாமல் செய்யக்கூடியதாக உள்ளது.
வீட்டில் இருக்கும் அனைத்து மூலைமுடுக்குகளிலும் சிறிய தட்டுகளை வைத்து அதில் கற்பூரங்களை போட்டு வைத்துவிட்டால், ஈக்களின் தொல்லை முற்றிலுமாக விலகி விடும்.
No comments:
Post a Comment